
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு கேடயமாக இருக்கிறார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை கோரி மல்யுத்த வீராங்கனைகள் தில்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் மீதான புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. பிரதமர் மோடி, பிரிஜ் பூஷனுக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்து வருகிறார் என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.
சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு 25 பதக்கங்களை பெற்றுத்தந்த மகள்கள் நீதிகேட்டு போராடி வருகின்றனர். மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 15 புகார்கள் உள்ளன. ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பிரதமர் மோடி பாதுகாப்பு கவசமாக உள்ளார். போராட்டம் நடத்தும் வீராங்கனைகளின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் படித்துப் பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டும் ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ்
பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாத்ரா கூறியுள்ளார்.
ஆசைக்கு இணங்கினால் மல்யுத்த பயிற்சிக்கான கருவிகளை இலவசமாக தருவதாக பிரிஜ்பூஷன் கூறியதாக மைனர் வீராங்கனைகள் 6 பேர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் பிரிஜ் பூஷன், தங்களை படுக்கைக்கு அழைத்ததாகவும், பயிற்சியின் போது சில சமயங்களில் தங்களின் அந்தரங்க பகுதிகளை தொட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முக்கிய மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினீஷ் போகட், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப். 23 ஆம் தேதியிலிருந்து பிரிஜ் மீது நடவடிக்கை கோரி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு நிகழ்ச்சியின் போது பேரணி நடத்த முயன்ற அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தனர்.
இதைத் தொடர்ந்து தங்களது வெற்றி பதக்கங்களை ஹரித்தாவில் கங்கை நதியில் வீசப்போவதாக வீராங்கனைகள் தெரிவித்திருந்தனர். ஆனால், விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகைத்தின் பெருமுயற்சியால் அவை தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதிக்கும் மல்யுத்த வீராங்கனைகள் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணாவிட்டால், அல்லது பிரிஜ்பூஷன் சிங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்காவிட்டால் மகா பஞ்சாயத்து நடத்தி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பாரதீய கிஸான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.