பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம்: காங்கிரஸ் புது குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம்: காங்கிரஸ் புது குற்றச்சாட்டு!
Published on

காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி எம்.பி.யின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மம்தா பானர்ஜி பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மம்தா பானர்ஜி விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார். இதனால் பிரதமர் மகிழ்ச்சியடைவார்" என்று கூறினார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க மாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸின் உள்கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மம்தா பானர்ஜி, "ராகுல் காந்தியின் சமீபத்திய லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம், பாஜக வேண்டுமென்றே ராகுல் காந்தியை ஹீரோவாக்க முயல்கிறது. பாஜக தனது சொந்த நலனுக்காக இதனைச் செய்கிறது. இதனால் மற்ற எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகள் முகாமின் கதாநாயகனாக்க முயற்சிக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், வரும் மே, ஜூன் மாதங்களில் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மூர்ஷிதாபாத் மற்றும் மால்சா பகுதிகளில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் இருந்து 2,000 தொண்டர்கள் வெளியேறி காங்கிரஸில் இணைந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறியிருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெற்ர பஞ்சாயத்துத் தேர்தலின்போது பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு இடையில் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதில், 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com