பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அங்கு காந்திநகரில் பாதுகாப்புத் துறை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் இந்திய நகர்ப்புற வீடுகள் மாநாட்டையும் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்வது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் சென்று அங்கு பாதுகாப்புத்துறை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் அக்டோபர் 21-ம் தேதி உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அக்டோபர் 23-ம் தேதி அயோத்தியா செல்கிற பிரதமர் மோடி, அங்கு ராம ஜென்ம பூமியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.
மேலும் சரயூ நதிக்கரையில் நடைபெறும் பிரமாண்ட தீபாவளி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அதன் பின்னர், குஜராத்தில் பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு சுமார் 15 ஆயிரத்து 670 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-இவ்வாறு பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.