‘பொது சிவில் சட்டத்தை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்க வேண்டும்’ பிரதமர் மோடி பேச்சு!

‘பொது சிவில் சட்டத்தை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் ஆதரிக்க வேண்டும்’ பிரதமர் மோடி பேச்சு!

ந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்த ரயில் சேவைகளை கொடி அசைத்துத் துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதன் பிறகு அம்மாநிலத்தின் பாஜக நிர்வாகிகளுடனும், பூத் பணியாளர்களிடமும் போபாலில் கலந்துரையாடினார்.

அந்தக் கலந்துரையாடலின்போது கட்சி நிர்வாகிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். அப்போது, முத்தலாக் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், ‘முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் சமூகப் பெண் குழந்தைகளுக்கு அநீதி இழைக்கிறார்கள். மேலும், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இன்று சிலர் மக்களைத் தூண்டி விடுகின்றனர். ஒரு நாட்டை இரண்டு சட்டங்கள் கொண்டு எப்படி வழி நடத்த முடியும்? அரசியலமைப்பு சட்டம் என்பது மக்களின் சம உரிமைப் பற்றி பேசுகிறது. மேலும், உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தி இருக்கிறது.

பொது சிவில் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த மதம் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தை எதிர்க்கக் கூடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது என்பதே எனது கருத்து. ஆகவே, பொது சிவில் சட்டத்தை அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் மக்களும் ஆதரிக்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.

மேலும் அவர், ‘ஊழல் செய்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்’ என்றும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களைச் சாடிப் பேசி இருக்கிறார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்துக்கு இன்று சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com