பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி மக்களிடம் எடுபடவில்லை: பிரியங்கா காந்தி!

பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி மக்களிடம் எடுபடவில்லை: பிரியங்கா காந்தி!
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி முறை மக்களிடம் எடுபடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா கூறினார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கினார்.

பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக , ஜபல்பூரில் நர்மதை நதிக்கரையில் அவர் பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கட்சியின் எம்.பி. விவகேதன்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸார் தம்மை அவமதித்துவிட்டதாக கூறிய பட்டியலைவிட மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமானது என்று பிரியங்கா பேசுகையில் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில மக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்த நன்மைகள் என்ன? உங்களின் வாழ்க்கை நிலை

சீரடைந்துவிட்டதா என்று அவர் மக்கள் கூட்டத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.

ஹிமாச்சலம் மற்றும் கர்நாடகத்தில் மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.

மத்தியிலும் மாநிலும் ஒரே கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இரட்டை என்ஜின் ஆட்சி பற்றி ஹிமாச்சலிலும், கர்நாடகத்திலும் பேசினார்கள். ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர். அதேபோல் மத்தியப் பிரதேச மக்களும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குடும்ப பெண்களுக்கு நிதியுதவி, ரூ.500 விலையில் எரிவாயு சிலிண்டர் மற்றும் மின்கட்டண சலுகை போன்றவற்றை மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவிக்கக்கூடும் என்று தெரிகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் மையப்பகுதியாகும் ஜபல்பூர். இது மாநிலத்தின் கலாசார நகரமாகவும் இருந்து வருகிறது. இப்பகுதியில் பழங்குடியினர் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை இந்தப்பகுதிக்கு வராத நிலையில், பிரியங்கா காந்தி ஜபல்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்ததாக விவேக் தன்கா எம்.பி. தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. எனினும் 2020 இல் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி பா.ஜ.க.வில் சேர்ந்ததை அடுத்து அங்கு அதிக பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

இதனிடையே பெண்களுக்கு எதிராக கருத்துக்களை கூறிய காங்கிரஸ் தலைவர்களுடன் மேடையை பிரியங்கா பகிர்ந்து கொண்டுள்ளதாக மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு தேர்தல் வரும்போதுதான் கங்கை, யமுனை, நர்மதை நதிகள் மீதும், ஹிந்து கோயில்கள் மீதும் அக்கறை வரும். காங்கிரஸின் போலி அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளர். வரும் தேர்தலில் மக்கள் காங்கிரஸுக்கு பாடம் கற்பிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com