பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்தும் , சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அங்கு ஆஸ்திரேலிய மற்றும் இந்திய இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தெரிகிறது. மேலும் நேற்று சிட்னியில் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் உரையாற்றினார்.
அந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்கதி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்த கருத்துக்கள் இடம் பெற்றது. இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதிச் செய்யப்பட்டது. தற்போது இரண்டு நாடுகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ- பசிபிக்கிற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன. இந்த பார்வையில் ஆதரிப்பதில் நாம் ஒன்றாக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்தார்.
சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் எங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.