‘பால்தாக்கரே இல்லாவிட்டால் பிரதமருக்கு இந்த நிலை கிடையாது’: உத்தவ் தாக்கரே விளாசல்!

‘பால்தாக்கரே இல்லாவிட்டால் பிரதமருக்கு இந்த நிலை கிடையாது’: உத்தவ் தாக்கரே விளாசல்!

காராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்த்து, அந்தக் கட்சியில் பிளவை ஏற்படுத்தியதோடு, அந்த மாநிலத்ததில் பாஜக ஆட்சியையும் அமைத்திருக்கிறது. இதனால் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீப காலங்களாக சிவசேனாவுக்கு நிகராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வளர்க்கும் உள்ளடி வேலைகளில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதனால் பாஜக மீது உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, “சிவசேனா கடந்த முப்பது ஆண்டுகளாக அரசியல் தலைமையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், பாஜகவுக்கு சிவசேனா, அகாலி தளம் கட்சிகள் தேவையில்லை. நான் பாஜகவை விட்டுவிட்டேன். ஆனால், இந்துத்துவாவைக் கைவிட்வில்லை. பாஜக இந்துத்துவாவைக் கடைபிடிக்கும் கட்சி கிடையாது. அந்தக் கட்சி இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ராஜ்தர்மத்துக்கு மதிப்பளிக்க நினைத்தபோது, தற்போது பிரதமராக உள்ள மோடியை பால் தாக்கரேதான் காப்பாற்றினார்.

அப்போது பால்தாக்கரே மட்டும் அவரை காப்பாற்றி இருக்காவிட்டால் தற்போதைய பிரதமர் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. பால்தாக்கரே யாரிடமும் வெறுப்பை வளர்த்துக்கொண்டது கிடையாது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரானவர்களையே பால்தாக்கரே வெறுத்தார். தற்போது எனது கண்ணியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தேன். அப்படி செய்யாதிருந்தால் என்னுடைய மக்களில் சிலரைப் போல் (ஷிண்டே) நானும் கழுத்தில் பெல்ட் போடப்பட்ட அடிமையைப் போல் மாறியிருப்பேன்” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com