பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் 9ம் தேதி வருகை தருகிறார். அதையொட்டி பாதுகாப்புக்காக வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வருகிற 9ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் வருகையையொட்டி முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் பல்வேறு பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வனம் மற்றும் சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி.அம்ரித் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஏப்ரல் 9ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் நரேந்தர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் ஆகியவை மூடப்படும் எனவும், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை வனவிலங்குகளை காண வாகன சவாரியும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.