மத்திய விமான போக்குவரத்து துறையை அலட்சியப்படுத்தும் தனியார் விமான நிறுவனங்கள்!

மத்திய விமான போக்குவரத்து துறையை அலட்சியப்படுத்தும் தனியார் விமான நிறுவனங்கள்!
Published on

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் விமானக் கட்டணங்கள் உயர்ந்ததாக சொல்லப்பட்டது. உண்மையில் ஒரு மாத காலமாகவே விமானக்கட்டணங்கள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. விமான சேவைகள் குறைக்கப்பட்டதும், கோடை விடுமுறை முடிந்த பள்ளிகள் திறக்கப்படும் காலம் என்பதாலும் விமானங்களில் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

கோ பர்ஸ்ட் நிறுவனம் தன்னுடைய சேவையை சென்ற மாதம் நிறுத்திக்கொண்டதுதான் ஆரம்பப் புள்ளி. உள்நாட்டில் தினமும் 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கிக் கொண்டிருந்த கோ பர்ஸ்ட் நிறுவனம், என்ஜின் கோளாறுகளால் சேவையை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவை இருந்த அனைத்து தடங்களிலும் பத்து மடங்கு கட்டணம் உயர்ந்துவிட்டது.

டெல்லியிலிருந்து மும்பை செல்வதற்கான கட்டணம் முன்னர் எட்டாயிரமாக இருந்தது. தற்போது 16 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து சென்னை வர தற்போது 17 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இண்டிகோவும், ஏர் இந்தியாவும் தற்போதைய டிமாண்டை தவறாக பயன்படுத்தி கட்டணங்களை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தனியார் நிறுவனங்களின் திடீர் விமானக் கட்டண உயர்வு பற்றி நேற்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, ஏர்லைன்ஸ் அட்வைசரி கமிட்டி உறுப்பினர்களோடு விவாதித்தார். கட்டணங்களை குறைக்கும்படி விமான நிறுவனங்கள் கேட்டுக்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.

தினமும் டிக்கெட் கட்டணங்களை அரசுத் தரப்பு கண்காணித்து விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். ஆனால், அமைச்சகத்தின் அறிவுரையை கேட்கும் நிலையில் தனியார் நிறுவனங்கள் இல்லை. விமான சேவைகளை தனியார் மயமாக்கிவிட்டதோடு, இதுவரையிலான கட்டுப்பாட்டையும் தளர்த்திவிட்டதால் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com