கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனையடுத்து கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல் 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கூட தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை கூடுவதால், சில தலைவர்கள் நேரில் சந்தித்து குடும்பத்தினரிடம் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அந்தவகையில், நாளை பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது X தளத்தில் அண்ணாமலை பதிவிட்டதாவது, “திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைபோல உள்ளது. இதனால், தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை இது ஏற்படுத்துகிறது. கடந்த 19ம் தேதி மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டோம்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டுவரும் திமுக அரசைக் கண்டித்து, நாளை ஜூன் 22ம் தேதி தமிழக பாஜக சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவு செய்துள்ளார்.