சென்னையில் "தி கேரளா ஸ்டோரி" வெளியான திரையரங்கு முன் போராட்டம்!
சென்னை முழுவதும் பலத்த சர்ச்சைகளுக்கு இடையே 15 திரையரங்குகளில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வெளியானது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திரையரங்கு முன் மற்றும் மால்கள் முன் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், திரையரங்கை நோக்கி முன்னேறிச் செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்முள்ளு ஏற்பட்டது. இதையொட்டி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் 650-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இரும்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் திரையரங்கிற்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் , ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை EA மாலில் உள்ள திரையரங்கிலும் இத்திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் முழக்கமிட்டனர்.

மேலும், அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மால் முன்பு இஸ்லாமிய இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை முன்னேறிச் செல்ல விடாமல் திருமங்கலம் மேம்பாலம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதேபோன்று, அமைந்தகரையில் உள்ள ஸ்கை வாக், மைலாப்பூர் ஐநாக்ஸ், வடபழனி ஃபோரம் மால் உள்ளிட்ட இடங்களிலும் இஸ்லாமிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட கோவையில் உள்ள புரூக் ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானதை அடுத்து கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்துள்ளார். திரையரங்கில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர் சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதிக்கப்படுவதாக கூறினார்.