ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள PSLV-C56 ராக்கெட். சிங்கப்பூரின் DS-SAR எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து செல்ல உள்ளது.
இந்தியாவின் PSLV-C56 ராக்கெட் சிங்கப்பூரின் DS-SAR என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, வருகிற ஜூலை 30ஆம் தேதி காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, எம்எல்வி ஆகிய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திவருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் மற்ற நாட்டு செயற்கைக் கோள்களையும் இந்திய ராக்கெட்டுகளின் உதவியோடு விண்ணில் செலுத்துகிறது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி உலகையே வியக்கச்செய்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது அந்த விண்கலத்தின் பயணம் நிலவை நோக்கி தொடர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சிங்கப்பூருக்குச் சொந்தமான புவிசார் செயற்கைக்கோளை, விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில்தான் வருகிற ஜூலை 30 ஆம் தேதி DS-SAR செயற்கைக்கோளுடன் மேலும் 6 செயற்கைக்கோள்களை சுமந்தபடி PSLV-C56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
DS-SAR செயற்கைக்கோளின் மொத்த எடை 360 கிலோவாகும். இது சிந்தடிக் ஆப்பரேச்சர் ரேடார் டெக்னாலஜியில் செயல்படக்கூடியது. அதாவது பகல் இரவு என எல்லா காலங்களிலும் புகைப்படங்களை துல்லியமாக எடுக்கும் தன்மைகொண்ட செயற்கைக்கோளாகும். இத்துடன் 23 கிலோ எடை கொண்ட வெலாக்ஸ் AM, நல்லியன், ஆர்கேட், ORB 12 STRIDER, ஸ்கூப் 2, கிலேசிய 2, ஆகிய ஆறு செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்கிறது நமது இந்திய ராக்கெட்.
இந்த ஏழு செயற்கைக்கோள்களும் விண்வெளியில் தொழில்நுட்பப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது என அதன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இவற்றை விண்ணில் ஏவுவதற்கான இறுதிகட்டப் பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.