மல்யுத்த வீரர்களுக்கு பி.டி உஷா ஆதரவு!

மல்யுத்த வீரர்களுக்கு பி.டி உஷா ஆதரவு!

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கங்கள் உள்ளிட்ட சர்வதேச பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர்கள் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி உஷா இன்று நேரில் சந்தித்துள்ளார்.

டெல்லி, ஜந்தர் மந்தரை வந்தடைந்த முன்னாள் தடகள வீரரும், இந்திய ஒலிம்பிக் அசோஸியேசன் தலைவருமான எம்பியுமான பி.டி உஷா, அங்கு கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்ற புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன் உரையாடினார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 27ம் தேதி , மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடுவதற்கு பதிலாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை அணுகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார், மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மூலமாக பிற விளையாட்டு வீரர்களை தவறாக நினைக்கவைப்பதாக பி.டி. உஷா குற்றம் சாட்டியிருந்தார்.

பி.டி.உஷாவின் இந்த கருத்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பட்ட மக்களிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக " பி டி உஷாவால் நாங்கள் சிறுவயதில் இருந்தே அவரால் ஈர்க்கப்பட்டோம். ஆனால், அவர் வீராங்கனைகளின் ஒழுக்கம் பற்றி பேசுகிறார். இங்கே ஒழுக்கமின்மை எங்கே இருக்கிறது, நாங்கள் அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம்," என்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

மல்யுத்த போட்டியில் காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், உஷாவின் கருத்துகளை "உணர்ச்சியற்றது" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இதுதொடர்பாக பேசிய வினேஷ் போகத், பி டி உஷா பாதிக்கப்பட்டவர்களை ஒழுக்கமற்றவர்கள் என்கிறார். அவரின் பேச்சு உணர்வற்றது. இந்தப் பிரச்சனை குறித்துப் பேச நான் அவரை அழைத்தேன், ஆனால் அவர் என் தொலைபேசியை எடுக்கவில்லை" என்று வினேஷ் போகத் கூறினார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறுகையில், "பி.டி.உஷாவின் தடகள அகாடமிக்காக இடிக்கப்பட்டபோது அவர் ஊடகங்கள் முன்தான் அழுதார். ஆனால், நாங்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அணுக வேண்டும் என்று பி.டி.உஷா விரும்புகிறார், ஆனால் நாங்கள் நீதிக்காக மூன்று மாதங்கள் மீண்டும், மீண்டும் அங்கு தான் சென்றோம். ஆனால் நீதி வழங்கப்படவில்லை." என்றார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, WFI தலைவருக்கு எதிராக போராட்ட தெருவில் இறங்கினர், அதன் பின்பு, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் WFI மற்றும் அதன் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் பிற பயிற்சியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு 'மேற்பார்வைக் குழு' அமைப்பதாக அறிவித்தது. .

இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க குழு பணிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு சாதகமாக இல்லை என்றும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷனுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக கூறி வீராங்கனைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் மீது கடந்த ஏப்ரல் 30ம் தேதி, பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபடுத்தியதற்காக அவர் மீது டெல்லி காவல்துறை சார்பில் இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் மல்யுத்த வீரர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் பிடி உஷா. இந்த சந்திப்பு தொடர்பாக பேசிய மல்யுத்த வீரர்கள் "வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com