

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்திற்கு பொதுமக்கள் பார்வையிட செல்வதற்கு பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி (கடைசி அனுமதி மாலை 5.15 மணி) வரை இந்த தோட்டத்தைப் பார்வையிடலாம்.
பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் திங்கட்கிழமையும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும். தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.