இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் விட்ட மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இன்று அந்த நாள் என்பதால் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோர் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது கட்சியினருடன் பேரணியாகச் சென்றார். இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, ராயபுரம் மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் உதயநிதி, அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அருகில் உள்ள மற்றொரு மொழிப்போர் தியாகியான டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மூலக்கொத்தளம் இடுகாட்டுக்குப் பின்புறத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திடீரென அமைச்சரை முற்றுகையிட்டு, தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தரும்படி கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தில், ‘தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற எந்தவித வசதிகளையும் அரசு செய்துத் தரவில்லை’ என்றும், அவற்றை நிறைவேற்றித் தரும்படி வலியுறுத்தியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தி, அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டஇந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.