புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் தற்போது அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். காலையில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், மாலையில் ஒரு பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலுவிடம் கேட்டதற்கு, புதுச்சேரி தருமபுரியை சேர்ந்த மீனரோஷனி (வயது 28) என்ற பெண்மணி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாக இயக்குனரகத்து தகவல் கிடைத்தவுடன் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அந்த பெண்மணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செப்டம்பர் 4 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேல் சிகிச்சைக்காக செப்டம்பர் 8ஆம் தேதி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அன்றே ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 12ஆம் தேதி மரணமடைந்தார்.
மேலும் புதுச்சேரி குருமாம்பேட்டை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்திரி கடந்த 10ஆம் தேதி காய்ச்சலுக்காக தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டார்.தொடர் சிகிச்சை பலனின்றி 13.09.2023 டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார் என்று குறிப்பிட்டார்.