மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் பயனடைவார்கள் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா, கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் தமிழிசை, சுனாமி வந்த பிறகு ஏறக்குறைய ரூ.46 கோடி அளவுக்கு மீனவ சகோதரர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மக்கள் துன்பத்தில் இருக்கும்போது விரைந்து செயலாற்றுபவராக முதலமைச்சர் இருந்து வருகிறார். மீனவ சகோதரர்கள்மீது மரியாதை வைத்திருக்கிறார் என்பதை முதலமைச்சர் சொல்லாமல் சொல்லிவிட்டார். மீன் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்குப் பிடித்த உணவு என்றால் அது மீன்தான். மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டது.
அப்போது மீன் உணவு சமைக்கப்பட்டது. அப்போது அவர்கள், `நாங்கள் மீன் உணவை அசைவம் என்று நினைப்பது இல்லை. சைவம் என்றுதான் நினைக்கிறோம்’ என்று குறிப்பிட்டார்கள்.முட்டையை சைவம் என்று சொல்லி பலர் இன்று அதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.