புதுக்கோட்டையை நாடாளுமன்ற தொகுதியாக அறிவிக்க மக்கள் கோரிக்கை!

புதுக்கோட்டை
புதுக்கோட்டை
Published on

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று புதுக்கோட்டை மக்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுடன் கடைசியாக இணைந்த பகுதி என்பது புதுக்கோட்டை சமஸ்தானம். கடல்கள், விவசாயம், தொழில்துறை, வணிகம் என்று பல்வேறு சிறப்புகளை உடைய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என்று தனியே நாடாளுமன்ற தொகுதி கிடையாது.

ஆரம்பத்தில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி என்ற பெயரில் இயங்கி வந்த நாடாளுமன்ற தொகுதி 2007 மறு வரையறைக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் திருச்சி, சிவகங்கை, கரூர், ராமநாதபுரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. இதனால் புதுக்கோட்டைக்கு என்று தனி நாடாளுமன்ற தொகுதி இல்லாத நிலை உருவானது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்வதற்கு ஏராளமான பணிகள் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்ற தொகுதியின் பிரதான பகுதிகளுக்கே நிதியை செலவு செய்ய முன்னுரிமை கொடுப்பதாகவும் இதனால் புதுக்கோட்டையை கவனிப்பதில்லை என்று குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

இந்த நிலையில் முன்பு இருந்த புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் தலையிட முடியாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

இப்படி புதுக்கோட்டை மக்கள் பல்வேறு வகையில் மீண்டும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இதன் வெளிப்பாடாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது புதுக்கோட்டையில் மட்டும் 56,000 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதி உருவாகும் பட்சத்தில் மாவட்டத்தினுடைய வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், மேலும் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, வளர்ச்சிப் பணிகள் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்றும் புதுக்கோட்டை மக்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com