புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நமது இந்திய தாய் நாட்டிற்காக வீரமரணமடைந்து தங்களது இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அவர்களும் வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது என்னும் அமைப்பு நடத்தியது. இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுமழை பொழிந்து முற்றிலுமாக அழித்தது.
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம். வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் அனைவரும் தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களின் நினைவினை போற்றுவோம்!