மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள் என தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுக்கடையில் தவறுகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் தான். அவர்கள் அப்படி கூறாமல் இருந்தால் தான் அதிசயம். சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர். இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை, குறைய வேண்டும் என நினைக்கிறோம். மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
அதிகாரிகளுடனும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மது விற்பனை அதிகரிப்பது எங்கள் நோக்கமல்ல. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும் என்பது நோக்கமாகும். மதுக்கடையில் செயல்படும் பார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
வழக்கு முடிந்ததும் பார் டெண்டர் வைக்கப்படும் தற்போது லைசன்ஸ் பெற்ற பார்கள் மட்டுமே நடக்கின்றன. டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது. அவைகளைப் பெற்றுக் கொண்டு ரூபாய் பத்து வழங்க தீர்ப்பு உள்ளது. மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது 500 மது கடைகளை மூடி உள்ளோம். பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதமே முடிவெடுக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.