
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்துக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய ஆடை கட்டுப்பாடுகள் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெகந்நாதர் ஆலயத்தின் மூத்த நிர்வாகியான விநாயக் தாஸ் மொகாபாத்ரா, மக்கள் வழிபடும் நான்கு முக்கிய ஸ்தலங்களில் புரி ஜெகந்நாதர் ஆலயமும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் ஜெகந்நாதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் கோயிலின் ஆன்மீகத்தன்மையையும், புனிதத்தன்மையையும் நிலைநிறுத்த வேண்டுமானால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க வேண்டியது அவசியமானது என்றார்.
புரி கோயிலின் நிர்வாக்க் குழுவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் தைதபதி நிஜோக் கூறுகையில், ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் தங்கள் இஷ்டம் போல் உடையணிந்து வருகிறார்கள். இது மதநம்பிக்கையை புண்படுத்துவதுபோல் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறிவருகின்றனர்.
எனவே புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வருகிற 2024 ஜனவரி முதல் தேதியிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வந்தால்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாரம்பரியமான ஆடைகளை அணிந்து வரவேண்டும். அரைக்கால் சட்டை, முழங்கால் தெரியும்படியான ஆடைகள், கிழிந்த ஜீன்ஸ்கள், ஸ்கர்ட்டுகள் அணிந்து கொண்டு கோவிலுக்கு வரக்கூடாது என்றும் அவர் கூறினார். நாட்டில் உள்ள பல்வேறு ஹிந்து கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.