சேலத்தில் களைகட்டிய தூய்மைப் பொங்கல் விழா!

சேலத்தில் களைகட்டிய தூய்மைப் பொங்கல் விழா!
Published on

ந்து விட்டது தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் பண்டிகை. பண்டிகையை வரவேற்கும் விதமாக பல கொண்டாட்டங்களையும், நிகழ்ச்சிகளையும், பரிசு களையும் அறிவித்தும் வழங்கியும் எங்கும் மகிழ்ச்சி அலைகளைக் காணமுடிகிறது. அந்த வகையில் மாசில்லா போகியைப் கொண்டாடவும் விவசாயிகளின் திருநாளான பொங்கலை கவுரவிக்கும் வகையிலும் சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 34 ஆவது வார்டுக்கு உட்பட்ட புது தெருவில் தூய்மை பொங்கல் விழா நடைபெற்றது.

மண்டல குழு தலைவர் தனசேகர் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைத்ததுடன் நகரின் தூய்மைக்கு உதவும்  தூய்மைப் பணியாளர் களுக்கு பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை ஏலக்காய், நெய், புத்தாடைகளை வழங்கி மகிழ்வித்தார். மரக்கன்றுகளை தானம் தருவது மற்றும் சுற்று சூழலைக் காப்பது போன்ற பல சமூகப் பணிகளை செய்து வரும் ஆர்வலர் பசுமை நாயகர்  ஈசன் எழில் விழியன் இந்த விழாவிற்கு முன்னிலை வகித்து சுகாதாரம் குறித்து உரையாடினார்.

மேலும் பொங்கலுடன் இணைந்த இயற்கை விவசாயத்தை நினைவு கூறும் வகையில் ஒருவருக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் வேடம் அணிவித்து  பாரம்பரிய இசை இசைத்தபடி  ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். உழவன் தாத்தா வேடம் அணிந்த நபர் மாணவ மாணவிகளுடன் விவசாயம் குறித்த பாடலுக்கு நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் தூய்மையை வலியுறுத்தியும் தூய்மை இயக்கப் பணியில் மக்களை ஈடுபடுத்துவது குறித்தும் விளக்க நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து புகையில்லா போகி மற்றும் மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்தும்  விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

       மேலும், போகி பண்டிகையால் ஏற்படும் புகை மாசுவை தவிர்க்க பழைய பொருட்களை எரிக்காமல் அவற்றைப் பிரித்து  தூய்மை பணியாளர்களிடம் வழங்க மக்களை வலியுறுத்தும் விதமாக பழையவற்றை அப்பணியாளர் களிடம் வழங்கினார்கள். இதில் உதவி ஆணையர் சுகாதார அலுவலர் உதவி செயற்பொறியாளர் உள்பட பல அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொது மக்களும் கலந்து கொண்டனர். பல நலத்திட்ட உதவிகளுடன் கலை நிகழ்வுகள் நிறைந்த இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வார்டு கவுன்சிலர் ஈசன் இளங்கோ செய்திருந்தார்.

அரசின் சார்பாக அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மனது வைத்து இது போன்ற விழாக்களை மக்களுக்காக நடத்தினால் மக்களுக்கு விழிப்புணர்வுடன் மகிழ்ச்சியும் சேரும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com