
பிரதமர் நரேந்திர மோடி மீதான அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை பெற்றுத்தந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கு தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் யூனியன் பிரதேச பொறுப்பாளராக பெரிய பதவி கொடுத்து நியமித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ” நீரவ் மோடி, லலித் மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிடுகின்றனர்” என கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்தினரை அவமதித்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை நிறுத்திவைக்க்க் கோரிய மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும், சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தும், அவர் மீண்டும் மக்களவை உறுப்பினராவதற்கு வழிவகுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில்தான், புதிய பதவி பெற்றுள்ள புர்னேஷ் மோடி (58), தெற்கு குஜராத் பகுதியைச் சேர்ந்தவர். மூன்று முறை எம்.எல்.ஏ.வான அவர் கட்சியின் ஓ.பி.சி. முகமாக பார்க்கப்படுகிறார். தொழில் முறையில் அவர் ஒரு வழக்குரைஞர்.
2013 ஆம் ஆண்டில் புர்னேஷ் மோடி, மேற்கு சூரத் தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டு வென்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ,வானார். 2022 தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எதிர்த்து போட்டியிட்டவரைவிட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
2021 ஆம் ஆண்டு பூபேந்திர படேல் ஆட்சியில் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்து, சுற்றுலாத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அவரது நியமனம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தபின் புர்னேஷ் மோடி தேசிய அளவில் பிரபலமானார்.
இப்போது துஷ்யந்த் படேல், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் பொறுப்பாளராக புர்னேஷ் மோடியை பாஜக மேலிடம் நியமித்துள்ளது. அக்கட்சியில் புர்னேஷ் மோடியின் செல்வாக்கை அதிகரித்துள்ளது.