நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா (68) இன்று மாலையில் பதவியேற்கிறார்.
நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20-ல் நடந்தது. இத்தேர்தலின்போது ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்த இரு கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தப்படி இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருக்க முடிவு செய்யப்பட்டது இந்நிலையில், புதிய அரசை அமைக்க, அதிபர் வித்யா தேவி பண்டாரி ஒரு வாரம் அவகாசம் அளித்திருந்தார். அந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அந்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
நேபாளத்தில் ஆட்சியமைப்பது குறித்து நேபாளி காங்கிரசைச் சேர்ந்த பிரதமர் ஷேர் பகதுார் துாபா மற்றும் பிரசண்டா இடையே நேற்று காலையில் பேச்சு நடந்தது. இதில், முதல் இரண்டரை ஆண்டுகள் தான் பிரதமராக இருக்க பிரசண்டா விருப்பம் தெரிவித்தார். ஆனால், இதை துாபா ஏற்காத நிலையில் பேச்சு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலியை, பிரசண்டா சந்தித்து பேசினார்.
அப்போது பல சிறிய கட்சிகளும் இதில் இணைந்து கொண்டன. இதையடுத்து இந்த புதிய கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் புஷ்பகமல் பிரசண்டாவை அடுத்த பிரதமராக நியமித்து, அதிபர் வித்யா தேவி பண்டாரி நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்பகமல் பிரசண்டா இன்று மாலை பதவியேற்க உள்ளார்.