புடின் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று!

விளாடிமிர் ஜெலன்ஸ்கி
விளாடிமிர் ஜெலன்ஸ்கி
Published on

உக்ரைன் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதே ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் நோக்கமாம். இத்தகவலை 'சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதுதான் எங்கள் குறிக்கோளாகும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எனவே விரைவில் போர் முடிவுக்கு வருவதை உறுதி செய்வோம் என்று புடின் கூறியுள்ளதாக இச்செய்தி தெரிவிக்கிறது .

புடினின் இந்த கருத்துக்கள் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

இதனிடையே வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், கடந்த பிப்ரவரி 24 இல் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடங்கியது. போருக்கு முற்றுப்புள்ளி வைத்து பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் புடினிடம் இருந்து வரவில்லை. ரஷிய அதிபர் புடின் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கிறது. ஒருபுறம் போர் முடிவுக்கு வரவேண்டும் என்கிறார். மறுபுறம் தாக்குதலைத் தொடர்கிறார். போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் அதற்கு ராஜதந்திர முறையில் தான் தீர்வுகாணவேண்டும் என்றும் கிர்பி குறிப்பிட்டார்.

போரில் சில தோல்விகள் ஏற்படும்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறுவதே அடுத்த தாக்குதலுக்கு தயாராவதற்குத்தான். இது தான் ரஷியாவின் தந்திரமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனை சந்தித்து வந்துள்ளார். உக்ரைனுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக பைடன் உறுதியளித்துள்ளார். மேலும் ராணுவ தளவாடங்கள் மற்றும் பொருளாதார உதவியாக 44.9 பில்லியன் டாலர் வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு 50 பில்லியின் டாலர் அளவுக்கு அமெரிக்கா உதவியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் பேட்ரியாட் ஏவுகணைகள் மிகவும் பழமையானவை. அவற்றை எங்களின் எஸ்-300 ஏவுகணை முறியடிக்கும். சிலர் உதவிக்கரம் நீட்ட வீணாக முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் மோதல் நீடித்து வருகிறது' என்கிறார் புடின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com