பேய் ரயிலில் பயணிக்கும் ரஷ்ய அதிபர் புதின்.

பேய் ரயிலில் பயணிக்கும் ரஷ்ய அதிபர் புதின்.

க்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், ரஷ்ய அதிபர் புதின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், உள்நாட்டிலேயே விமானங்களைத் தவிர்த்து 'கோஸ்ட் ட்ரெயின்' என்ற ரகசிய ரயிலில் அவர் பயணம் செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. 

உலகப் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் ரஷ்யா, பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. இந்நாட்டில் அதிபராக விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் தற்போது தனி நாடாக இருக்கிறது. இவர்களுக்கு இடையில் எல்லை பிரச்சினையும் இருக்கிறது.

இவர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால், அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்கக் தொடங்கியது. இந்த போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், இதற்கு காரணமான ரஷ்யா மீது பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கோபத்தில் இருக்கிறது. 

இதனால், ரஷ்ய அதிபர் புதின் உயிருக்கு அதிக ஆபத்து இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருடைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்கு செல்வதாக இருந்தாலும் விமானத்தைத் தவிர்த்து உள்நாட்டிலேயே ரகசிய ரயில் பயணம் மட்டுமே புதின் செல்வதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது அவர் பயணிக்கும் 'கோஸ்ட் ட்ரெயின்' என்ற பெயரில் இயங்கும் ரயில் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது. 

இந்த கோஸ்ட் ட்ரயினில் மசாஜ் நிலையம், அழகு நிலையம், ஜிம், குளியலறை, மீட்டிங் ஹால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக அதிபர் புதினுக்கென்று தனித்துவமான வசதிகள் கொண்ட சொகுசு பெட்ரூமும் இருக்கிறதாம். இது தவிர, எல்லா விதமான மருத்துவ வசதிகளும், வெண்டிலேஷன் உட்பட அவசரகால உதவிக்கான கருவிகளும், மருந்து மாத்திரைகளும் எல்லாமே வைக்கப்பட்டுள்ளன. 

அதிபர் புதின் இருக்கும் பெட்டி குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயிலில் இருந்தே மற்ற அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள அதிநவீன தொலைத்தொடர்பு வசதி நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 22 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலின் மொத்த மதிப்பு 74 மில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது. இந்த ரயிலைப் பராமரிக்க மட்டுமே 130 கோடி வரை செலவு செய்யப்படுகிறதாம். 

கடந்த 2018 முதல் புதின் இந்த ரயிலைப் பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு, அடிக்கடி இந்த ரயிலை தற்போது அவர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ரயிலில் புதின் எங்கு செல்கிறார், எப்போது செல்கிறார் என்பதெல்லாம் ரகசியமாக இருந்துவருகிறது. 

தன் எதிரிகளை குழப்புவதற்காகவே  புதின் விமானங்களைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்கிறார் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com