முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் கத்தாரில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. இது நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த எட்டு இந்தியர்களும் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த எட்டு இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னவென்று கத்தார் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இவர்களுக்காக அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவும் பலமுறை நிராகரிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதாகவும் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் அனைவருமே இந்திய கடற்படையில் 20 ஆண்டுகள் வரை சேவை செய்து சாதனை படைத்தவர்கள். மேலும் கடற்படையில் முக்கிய பதவியில் இருந்தவர்கள். எனவே இவர்கள் எட்டு பேருக்கும் தூதராக அணுகல் வழங்கப்பட்டு அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் எட்டு கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு எதிராக இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் அரசு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மேல்முறையீட்டை முழுமையாக ஆராய்ந்த பிறகு, கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கான தேதியை தெரியப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.