ரவீந்திரநாத் எம்.பிக்கும் அ.தி.மு.கவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை - ஜெயக்குமார் அதிரடி!

ரவீந்திரநாத் எம்.பிக்கும் அ.தி.மு.கவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை - ஜெயக்குமார் அதிரடி!

தேனி தொகுதியின் எம்.பியான ரவீந்திரநாத்தின் பதவி பறிக்கப்பட்ட வழக்கு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.கவின் நிர்வாகியுமான ஜெயக்குமார், ரவீந்திரநாத் எம்.பிக்கும் அவரது தந்தையார் பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் அ.தி.மு.க கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். முன்னாள் தமிழக முதல்வரும் அ.தி.மு.க தலைவருமான பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத், அ.தி.மு.கவை உட்கட்சி பிரச்னை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்குமாறு தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் ரவீந்திரநாத் எம்.பிக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான ஜெயக்குமார், ஓ.பி.எஸ், அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். தன்னுடைய மகன் வெற்றி பெற்றால் போதும் என்பதற்காக ஒ.பி.எஸ் பணத்தை வாரி இறைத்தார்கள். பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதிகளில் அ.தி.மு.க தோற்க வேண்டும் என்று நினைத்தார்கள். அந்த உண்மையெல்லாம் தற்போது வெளி வந்திருக்கிறது என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கவனம் செலுத்தினார் என்பதை ஏற்கனவே பல்வேறு முறை அதி.மு.கவினர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இரட்டைத் தலைமை பிரச்னையின்போது 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில .ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றும் தேனி தொகுதியை தாண்டி வெளியே வரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

உட்கட்சிக்குள் ஏகப்பட்ட மோதல்கள் இருந்தாலும் இரட்டைத்தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தார்கள். 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சி தலைமையிடம் உள்ள விரிசல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் ரவீந்திரநாத் எம்.பி பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால், ஓ.பி.எஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com