சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது இனவெறி தாக்குதல்!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது இனவெறி தாக்குதல்!

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயது பெண்மணி ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு, மே மாதம் 7ம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வோங் ஜிங் ஃபோங் என்பவர் அந்தப் பெண்மணியிடம், “நீங்கள் ஏன் முகக்கவசம் அணியவில்லை” என்று கேட்டு இன வெறியோடு அவதூறாகப் பேசியதுடன், அவரது மார்பிலும் எட்டி உதைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் சிங்கப்பூரில் அச்சமயத்தில் பூதாகரமாகப் பேசப்பட்டது. இது குறித்து உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சிங்கப்பூர் பிரதமர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடித்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரனை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அந்த நபர் முற்றிலும் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய் முதன் முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு நேர்ந்த இனவெறித் தாக்குதல் குறித்து நீதிபதியிடம் கண்ணீர் மல்க விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில் அவர், “வோங் ஜிங் ஃபோங் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பிறகு அவர் எனது நெஞ்சில் காலால் எட்டி உதைத்தார்” என நீதிபதி முன்னிலையில் தழுதழுத்தபடி கூறினார். அதைக்கேட்ட நீதிபதி அவரை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் வந்து பேசுமாறு சொன்னதை அடுத்து, விஷ்ணுபாய் நீதிமன்ற வளாகத்துக்கு சற்று நேரம் சென்றுவிட்டு மீண்டும் வந்து பேசினார். “அந்தச் சம்பவம் என்னை மனரீதியாக பெரிதும் பாதித்துள்ளது. அதோடு அது எனக்கு கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார். அவரது விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூர் நாட்டு சட்ட திட்டங்களின்படி எந்தவொரு நபரின் மத அல்லது இன உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் பேசுவதும் நடந்து கொள்வதும் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம் என்பது விதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com