
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி எம்.பி.யும், அவரது உறவினரும் பா.ஜ.க. எம்.பி.யுமான வருண்காந்தியும் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் ஆலயத்தில் ஒருவரையொருவர் எதிர்பாராதவிதமாக சந்தித்தனர். இருவரும் கேதார்நாத் ஆலயத்துக்கு பிரார்த்தனைக்காக சென்றுள்ளனர்.
ராகுல்காந்தியும், வருண்காந்தியும் கேதார்நாத் ஆலயத்திற்குள் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டதாகவும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டதாகவும் ஆலய நிர்வாக குழு தலைவர் அஜயேந்திர அஜய் தெரிவித்தார்.
இருவரும் குறுகிய நேரமே சந்தித்தாலும் மிகவும் மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருந்ததாத தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வருண் காந்தியையும், அவரது மகளையும் சந்தித்ததில் ராகுல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கடந்த சில மாதங்களாக பா.ஜ.க. கூட்டங்களை வருண்காந்தி தவிர்த்து வரும் நிலையில் ராகுல்காந்தியுடன் வருண் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் ஏதும் பேசவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல்காந்திக்கும் வருண்காந்திக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் மகேந்திர பட் கருத்து தெரிவிக்கையில், “ராகுல்காந்தியை சனாதன தர்மத்தை நோக்கி அழைத்துச் செல்லும் திறன் வருண்ஜிக்கு இருப்பது நல்லதுதான்” என்று கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் சனாதன தர்மத்தின் சாய்வதாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.