அரசு பேருந்தில் பயணித்து மக்களைக் கவர்ந்த ராகுல்காந்தி!

அரசு பேருந்தில் பயணித்து மக்களைக் கவர்ந்த ராகுல்காந்தி!
Published on

ர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது. அந்த வகையில் பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிகவும் நெருங்கிப் பழகி வருவது அம்மாநில மக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது.

பெங்களூரு கன்னிங்காம் சாலையில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அங்கு பேருந்துக்காக காத்து இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். அதைத் தொடர்ந்து, அவர்களோடு அரசுப் பேருந்திலும் பயணம் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கு இலவச பேருந்து சேவை குறித்தும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்தும் எடுத்துக் கூறினார். அப்போது, பேருந்துப் பயணத்தில் தங்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் அந்தப் பெண்கள் ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, லிங்கராஜபுரம் என்ற பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் உரையாடினார். அங்கு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்களிடம் எடுத்துக் கூறினார். இந்தப் பேருந்துப் பயணத்தின்போது ராகுல் காந்தியோடு பயணித்த சக பயணிகள், அவரோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com