அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி' பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் சூரத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்றும், அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.