மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி!

Rahul Gandhi
Rahul Gandhi

த்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைத்த மல்யுத்த வீர்ர்கள் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை புதன்கிழமை நேரில் சந்தித்து உரையாடினார் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி.

பஜ்ரங் புனியாவின் ஊரான ஹரியானாவின் சாரா கிராமத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, மல்யுத்த பயிற்சி களமான வீரேந்திர அகாராவில் வைத்து அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 2022  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரர் தீபக் புனியாவும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பு தொடர்பாக பஜ்ரங் புனியா கூறுகையில், "ஒரு மல்யுத்த வீரரின் அன்றாட வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ராகுல் காந்திக்கு இங்கு வந்தார். அவர் என்னுடன் மல்யுத்தம் மற்றும் உடற்பயிற்சி செய்தார். மல்யுத்தத்தின் நுட்பங்களை அறிந்து கொண்டார். மல்யுத்தத்தில் புள்ளிகள் எப்படி கிடைக்கும், அவை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது போன்ற சில விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் எங்களுடன் அமர்ந்து ரொட்டி சாப்பிட்டார்" என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார்.

ஒரே ஒரு கேள்விதான் - இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் போடப்படும் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், மற்ற குழந்தைகள் மல்யுத்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?.

இவர்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள், இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு இவர்கள் சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும்." என்று கூறியுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பா.ஜ.க. எம.பி. பிரிஜ் பூஷன். இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீது நடவடிக்கை கோரி மல்யுத்த வீர்ர்கள், வீராங்கனைகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து அவர் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை சந்தித்து வலியுறுத்தினர்.

இதனிடையே, மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரிஜ் பூஷன் விவகாரத்தில் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற்றது.

இதில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக வெற்றிபெற்றார். மேலும் நிர்வாகிகள் பதவியையும் அவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர்.

இதையும் படியுங்கள்:
WFI தேரதல் சர்ச்சை: கேல்ரத்னா, அர்ஜுனா விருதை துறப்பதாக வினீஷ் போகத் பிரதமருக்கு கடிதம்!
Rahul Gandhi

இதனால் பிரிஜ் பூஷனுக்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார். இந்த இருவரைத் தொடர்ந்து வினீஷ் போகத்தும் கேல்ரத்னா விருதையும், அர்ஜுனா விருதையும் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com