
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலம் வல்லபநகரில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.
சாதி வாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்-ரே போன்றது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது. பழங்குடியினர் நலனை பாதுகாப்பதில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது என்றும் ராகுல் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை ஓபிசி என்று சொல்லிக் கொள்கிறார். நான் சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசும்போது இந்தியாவில் ஒரு சாதிதான் இருக்கிறது. அது ஏழைகள் சாதி என்று மோடி கூறுகிறார். ஆனால், கோடிஸ்வரர்களான அதானி, அம்பானி என்று மற்றொரு சாதி உள்ளது என்று தெரிவித்தார்.
அதானி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார். அது வெளியில் தெரியாமல் மக்களை திசைத்திருப்புவதே மோடியின் வேலையாகும். அவர்கள் ஒரு குழுவாகவே வேலை செய்கின்றனர் என்று ராகுல் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகையில் யார் யார் எந்த சாதி என்பது தெரியவேண்டும். அது தெரியாமல் அவர்கள் பங்களிப்பு பற்றி நாம் எப்படி பேசமுடியும் என்றார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜெய்ப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சிமீது அவதூறு கூறுவதைத் தவிர பிரதமர் மோடி, தனது ஆட்சிக்காலத்தில் எந்த பணியையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
முதலில் என்மீது அவதூறு கூறினார். அடுத்து ராகுல் மீது, இப்போது ராஜஸ்தான் முதல்வர் மீது அவதூறு கூறுகிறார். நான் அவரது தந்தையை பழித்ததாக கூறுகிறார். இந்த உலகில் இல்லாத ஒருவரை நான் ஏன் பழிக்க வேண்டும். அதற்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்டார்.