
தனது இருபக்கத்திலும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், சச்சின் பைலட் இருவரும் இருந்த நிலையில், “நாங்கள் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெறுவோம்” என்றார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு காங்கிரஸ் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகிறது.
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி வியாழக்கிழமை ஜெய்ப்பூர் வந்தார். அப்போது அப்போது அவரை மாநில முதல்வர் அசோக் கெலோட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவரும் வரவேற்றனர்.
அப்போது இருவரையும் அணைத்தபடி ராகுல்காந்தி, நாங்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள், ஆனால், நாங்கள் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கிறோம். தொடர்ந்து ஒற்றுமையாக இருப்போம். காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார். இது தொடர்பான விடியோவும் வெளியிடப்பட்டது.
அசோக் கெலோட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் ராகுல் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வின்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் டோடாஸ்ராவும் உடன் இருந்தார்.
நேற்றுதான் (புதன்கிழமை) அசோக் கெலோட் ச்ச்சின் பைலட் பங்கேற்ற கட்சிக் கூட்டத்தின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் “நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். வெற்றி எங்களுக்குத்தான்” என்று குறிப்பிட்டிருந்தார். நாங்கள் எங்களுக்குள் இருந்த பகைமையை மறந்துவிட்டோம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி, “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெறுவோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலோட் முதல்வராக இருக்க, 2020 இல் சச்சின் பைலட் துணை முதல்வராக இருந்தார். ஆனால், திடீரென பைலட், தனது ஆதரவாளர்களுடன் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பிய நிலையில் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் இருவரிடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. பைலட் ஒரு துரோகி என கெலோட் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சச்சின் பைலட், அசோக் கெலோட் அரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு யாத்திரையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்திக்கு முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் இருப்பதாகவும் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், பலரும் நினைப்பதுபோல் ராஜஸ்தான் காங்கிரஸில் உட்கட்சி பூசல் ஏதும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். வருகிற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிப்பதுதான் எங்களின் நோக்கம்” என்று கூறியிருந்தார்.