செப்டம்பரில் ராகுல் காந்தி ஐரோப்பா பயணம்!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஐரோப்பாவுக்கு பயணம் செல்ல இருக்கிறார். மேலும் அவர், பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரான்ஸுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா செல்லும் ராகுல் காந்தி, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்துப் பேச இருக்கிறார். கடந்த மே மாதம் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்று வந்தார். சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் நகரங்களுக்கும் சென்ற ராகுல், அங்குள்ள இந்திய வம்சாவளியினர், முதலீட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுல், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆற்றிய உரை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ‘இந்தியாவில் ஜனநாயகமே இல்லை; இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். நான் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், எனக்கே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியில்லை. பத்திரிகை சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது’ என்று பேசி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் பாஜகவினர், ‘முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து விட்டதாக’ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com