அஸ்ஸாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம்! காங்கிரஸ் தொண்டர்கள்-போலீஸார் தள்ளு முள்ளு

அஸ்ஸாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம்!
காங்கிரஸ் தொண்டர்கள்-போலீஸார் தள்ளு முள்ளு

ராகுல் தலைமையிலான காங்கிரஸின் பாரத் ஜடோ நியாய யாத்திரை செவ்வாய்க்கிழமை அஸ்ஸாமில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டது. இதனால் போலீஸாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோரின் கூட்டுச் சதியே இதற்கு காரணம் என்று கூறி ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

அஸ்ஸாம் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் வேண்டுமானால் விதிகளுக்கு புறம்பாக செயல்படலாம். ஆனால் நாங்கள் (காங்கிரஸார்) அதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். அதற்காக எங்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜடோ நியாய யாத்திரை செவ்வாய்க்கிழமை குவாஹாட்டிக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கோபமடைந்து தடைகளை உடைத்துக் கொண்டு முன்னேற முற்பட்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும்  இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவே பாரத் ஜடோ நியாய யாத்திரை நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா தெரிவித்தார். .யாத்திரையை தடுப்பதன் மூலம் அஸ்ஸாம் அரசு பிரச்னை ஏற்படுத்த விரும்புகிறது. மேலும் தேவையில்லாமல் வழக்கு போட நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

பல்கலைக்கழக மாணவர்களிடையே நான் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், முதல்வரும், மத்திய உள்துறை அமைச்சரும் சதி செய்ததால்  பேசமுடியாமல் போய்விட்டது என்று ராகுல் கூறினார். யாத்திரையில் குழுமியிருந்த மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, நான் உங்கள் பல்கலைக்கழகத்தில் பேசுவதாக இருந்தேன். உங்கள் பிரச்னைகளை கேட்கவிருந்தேன். ஆனால், அசாம் முதல்வரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் துணைவேந்தருடன் பேசி நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டனர். ராகுல்காந்தி, மாணவர்களுடன் கலந்துரையாடுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறிவிட்டனர்.

நீங்கள் யாருடைய பேச்சை வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாட்டின் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறிவிட்டனர் என்றார் ராகுல்காந்தி. முன்னதாக திங்கள்கிழமை மேகாலயம் சென்ற ராகுல் யாத்திரை, செவ்வாய்க்கிழமை கடைசி கட்டமாக அஸ்ஸாமுக்கு மீண்டும் வந்தது. ஆனால், குவாஹாட்டி புறநகர்பகுதியிலேயே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com