ரயில்வே துறையில் தரமில்லாத வாக்கி டாக்கி - வெளிநாட்டிலிருந்து வாங்க மத்திய அரசு முடிவு

 ரயில்வே
ரயில்வே
Published on

இந்திய ரயில்வே துறையில் பயன்பாட்டில் உள்ள வாக்கி டாக்கி சாதனங்கள் தரமானவை அல்ல என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரயில்வே பாதுகாப்பு குறித்து சமீபத்தில் நடந்த கூட்டத்தில்  இது குறித்து விவாதிக்கப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து தரமான வாக்கி டாக்கி சாதனங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ரயில்வே பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், ரயில்வே துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள வாக்கி, டாக்கி சாதனங்கள், எமர்ஜென்ஸி பிரேக் உள்ளிட்டவற்றின் தரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய ரயில்வே சேர்மன் அனில் குமார் லகோட்டி, டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிய வாக்கி டாக்கி தரமாக இல்லையென்றும் இது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தூரம் அதிகமாக இருக்கும்போது ஒலியின் துல்லியம் சரியாக இல்லாத காரணத்தால் ரயில்வே போக்குவரத்தில் இந்தியாவில் தயாராகியுள்ள வாக்கி டாக்கியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் வெளிநாடுகளிலிருந்து தரமான வாக்கி, டாக்கி வாங்குவதற்கு முடிவடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து, ரயில் சக்கரங்களில் ஏற்படும் மாறுதல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்து கொள்ள வாக்கி டாக்கி சாதனங்கள் அவசியம். ஆகவே தரமான வாக்கி டாக்கி சாதனங்களை பயன்படுத்தும் நோக்கத்தில், மேக் இன் இந்தியா வழியாக பொருட்களை பெறாமல் இருக்க விலக்கு அளிக்குமாறு கேட்டு கோரிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ரயில்வே ஏராளமான விபத்துகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. வந்தே பாரத்  ரயில்கள் சாதனை படைத்து வரும் அதே நேரத்தில் கோரமான விபத்துகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. ரயில்வேயின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழும் நேரத்தில், பாதுகாப்பு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியிருக்கிறது.  

ரயில்வேத்துறையில் 23 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கி டாக்கி சாதனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. வாக்கி டாக்கியை விட எளிதான மொபைல் சாதனங்கள் இருந்தாலும் மொபைல் பயன்பாடு அனுமதிக்கப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பிரத்யேக நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com