வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை குறைக்க ரயில்வே பரிசீலனை!

வந்தே பாரத் ரயில்கள்
வந்தே பாரத் ரயில்கள்

இந்தூர் - போபால், போபால் - ஜபல்பூர், நாக்பூர் - விலாஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தை குறைப்பது குறித்து மத்திய ரயில்வேத்துறை பரிசீலித்து வருகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்த தூரத்தில உள்ள இடங்களுக்கான கட்டணம் அதிகம் என்பதால் அதில் பயணிகள் செல்ல விரும்பாததால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக உள்ளன. இதையடுத்து மக்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் கட்டணத்தை திருத்தியமைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

இந்தூரிலிருந்து போபாலுக்கு மூன்று மணிநேரத்தில் செல்லும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் மாதத்தில் 29 சதவீதம் பேர்களே பயணித்துள்ளனர். இதேபோல போபாலிலிருந்து இந்தூருக்கு 21 சதவீத பயணிகளே சென்றுள்ளனர். அதாவது கட்டணம் அதிகம் என்பதால் குறைவான பயணிகளே சென்றுள்ளனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்துள்ளன.

இதேபோல நாக்பூர்-விலாஸ்பூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ஐந்தரை மணி நேரத்தில் பயண தூரத்தை கடந்துவிடுகிறது என்றாலும் அதில் சராசரியாக 50 சதவீத பயணிகளே சென்றுள்ளனர். இதேபோல போபால்-ஜபல்பூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் நான்கரை மணி நேரப் பயணம்தான் என்றாலும் அதில் 32 சதவீத பயணிகளே சென்றுள்ளனர்.

இந்தூர்-போபால் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் இருக்கை கட்டணம் ரூ.950, அதே ரயிலில் எக்ஸிக்யூடிவ் இருக்கை வசதியுடன் செல்வதற்கு கட்டணம் ரூ.1,525. இதேபோல நாக்பூர்-விலாஸ்பூர் வந்தேபாரத் ரயிலில் எக்ஸிக்யூடிவ் இருக்கை வசதிக்கு ரூ.2045-ம், சாதாரண இருக்கைக்கு ரூ.1075 –ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. போபால்-ஜபல்பூர் இடையே ஓடும் வந்தே பாரத் ரயிலில் ஏ.சி. சேர் கார் இருக்கைக்கு ரூ.1055-ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கைக்கு ரூ.1880-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் திரும்பி வருவதற்கான பயணக்கட்டணம் முறையே சாதாரண இருக்கைக்கு ரூ.955-ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கைக்கு 1790-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே புதிய ரயில்விடப்பட்டால் பயணிகளிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்யாமல் அதிக அளவு கட்டணம் நிர்ணயித்தால் குறைந்தபட்ச தூரத்துக்கான இடங்கள் காலியாகவே இருக்கும் என்று ரயில்போக்குவரத்து குழுவின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாலைவழி பயணத்தைவிட அதிக கட்டணம் இருந்தாலோ அல்லது இதர ரயில்களின் கட்டணத்தைவிட அதிக கட்டணம் இருந்தாலோ மக்கள் வந்தேபாரத் போன்ற ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.3 முதல் 5 மணி நேர பயணத்துக்கான கட்டணத்தை குறைத்தால் பயணிகள் அதிக அளவில் பயணிக்க முன்வருவார்கள் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெரும்பாலான வந்தேபாரத் ரயில்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் செல்லும் வந்தேபாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாகவே உள்ளன. பயணிகள் வருகையை அதிகரிக்க வேண்டுமானால் கட்டணத்தை சிறிது குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.காஸர்கோடி-திருவனந்தபுரம், காந்திநகர்-மும்பை சென்ட்ரல், வாராணசி-புதுதில்லி, டேராடூன்-அமிர்தசரஸ், மும்பை-சோலாப்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அதிக எண்ணிக்கையில் (100 சதவீதம்) மக்கள் பயணிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com