தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை: மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை..!

RAIN
RAIN
Updated on

இயற்கை நிகழ்வுகளில் சற்றே அச்சம் தருவது கனமழை மற்றும் புயல் எச்சரிக்கைகள். அந்த வகையில் தற்போது ஏற்படும் வானிலை மாற்றங்களில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மே மாதம் இரண்டாம் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வெளியான வானிலை அறிக்கைத் தகவல்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 3-ந்தேதி வரை வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் மே மாத வானிலை மாற்றங்கள் பற்றிய வானிலை மையம் அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மே இரண்டாம் வாரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கேரளா கடலோர பகுதிகள் லக்ஷதீப் தீவுகள், கர்நாடக மேற்கு கடற்கரை மற்றும் தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் சில தாக்கம் இருக்கலாம். குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான தாழ்வு மண்டலம் பொதுவாக மழை மற்றும் காற்று அதிகரிக்கும் நிலையை குறிக்கிறது. இது முன்-மழைக்கால செயல்பாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை ஆரம்பத்திற்கு முன் அறிகுறியாக கருதப்படும் இந்த தாழ்வு மண்டலத்தின் விளைவுகளாக மேகமூட்டம் மற்றும் மழை அதிகரிக்கும் எனப்படுகிறது.மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச்சுடன் ஏற்படும் சூழல் இருந்தால், இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் ஆய்வு கூறுகிறது.

இது உறுதியான புயல் அறிவிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் தரும் முன்னெச்சரிக்கைகளை கவனமாக கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
போர் சூழலை சாதகமாக்கி வணிக சிலிண்டர் விலையை உயர்த்துவது சரியல்ல – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!
RAIN
logo
Kalki Online
kalkionline.com