
கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய சினிமா திரைப்படங்கள், பாலிவுட் சினிமாவை மிஞ்சி வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. குறிப்பாக ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் தான் இதற்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது எனலாம். பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய ரசிகர்களையும் தாண்டி, மற்ற நாட்டு ரசிகர்களையும் ஈர்த்தது. இதில் பாகுபலி-2 ரூ.1500 கோடிக்கும் வசூலை ஈட்டியது. இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.1,200 கோடி என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் படம் காசியின் வரலாற்றைக் கூறும் படமாக உருவாகி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி, இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையைப் படைத்து விட்டார். இப்போது ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஹாலிவுட் படங்கள் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும். ஆனால் முதன்முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் 130-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ராஜமௌலி மற்றும் மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் அது.
தெலுங்கு சினிமாவின் தரத்தை இந்திய அளவில் உயர்த்தியவர், தற்போது உலக அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளார். பல மொழிகளில் வெளியாகப் போகிறது என்பதால் இப்படத்தின் பட்ஜெட்டும் ரூ.1,200 கோடியாக எகிறியுள்ளது. படத்தின் உண்மையான பட்ஜெட் இதுதான் என் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தால், இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இதுவாகத் தான் இருக்கும்.
ராஜமௌலி இயக்கும் இப்படத்திற்காக மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. காசியின் வரலாற்றை எடுத்துரைக்கும் தொன்மக் கதையாக இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது இப்படம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால், படத்தின் வணிகம் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு உலகம் முழுக்க 130-க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய அவதார் திரைப்படத்தின் வசூலை ராஜமௌலி இயக்கும் புதிய படம் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ராஜமௌலியின் இந்தப் படம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் இப்போதே இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், படத்தின் வசூல் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. ராஜமௌலி திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளன. அவ்வகையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.