ராஜஸ்தான்: தேர்தலுக்குப் பின் முதல்வரை முடிவு செய்ய பாஜக திட்டம்!

ராஜஸ்தான்: தேர்தலுக்குப் பின் முதல்வரை முடிவு செய்ய பாஜக திட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த் தேர்தலில் ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜ.க.வும் போராடி வருகின்றன. ஆனால், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல்கள் இருந்து வருவதால் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கெலோட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல்கள் வலுத்து வருகின்ற போதிலும் ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று கெலோட் முயற்சித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு பைலட் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கெலோட், பைலட் இருவரையும் அழைத்துப் பேசி சமாதனப்படுத்தி, கோஷ்டிப்பூசலை ஒதுக்கிவிட்டு கட்சியின் தேர்தல் வெற்றிக்கு உழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் முதல்வர் யார் என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பின் முடிவு செய்யலாம் என்றும் கூறிவிட்டது.

இதேபோல பா.ஜ.க.வுக்குள்ளும் கோஷ்டிப்பூசல்கள் இல்லாமல் இல்லை. ஒருபுறம் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. மற்றொரு புறம் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன்ராம் மேக்வால், பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் ஆகியோர் தாங்கள்தான் முதல்வர் வேட்பாளருக்கு தகுதியான நபர் என்று கூறிவருகின்றனர்.

மிஜோரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா என ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருந்தாலும் ராஜஸ்தான் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. பிரிவுபட்டு நிற்கும் தலைவர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக செயலாற்றினால்தான் வெற்றியை கைப்பிடிக்க முடியும் என்று பா.ஜ.க. தலைமை கருதுகிறது.

ராஜஸ்தான் பா.ஜ.க.விற்குள் நிலவி வரும் கோஷ்டி மோதலுக்கு தீர்வுகாணும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அனைத்து தலைவர்களையும் தில்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலுக்கு உழைக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஐந்து மாதங்களில் நான்கு முறை ராஜஸ்தான் வந்திருந்து பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற போதிலும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிபூசல்

காரணமாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலே சென்றுவிட்டார். தற்போதைய சூழலில் பிரதமர் மோடியை முன்வைத்தே பா.ஜ.க. அங்கு தேர்தல் பிரசாரம் செய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதால் மாநிலத் தலைவர்கள் எவரையும் முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை. முதலில் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்போம், தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று பா.ஜ.க. மேலிடம் நினைப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் நீடித்து வரும் நிலையில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது சரியாக இருக்காது என்று பா.ஜ.க. தலைமை நினைக்கிறது. மேலும் பிரதமரை முன்னிருத்தி, மத்திய அரசின் சாதனைகள், கெலோட் அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் தேர்தல் பிரசாரம் செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளையும், அசோக் கெலோட் அரசு நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க பா.ஜ. முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பா.ஜ.க. தலைமை வசுந்தரா ராஜே சிந்தியாவை ஓரங்கட்டினால், அவரது ஆதரவாளர்கள் கொதித்தெழுவார்கள். அது தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை பாதிக்க்க்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் மேக்வால், அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, திவ்யகுமாரி எம்.பி. மற்றும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் முதல்வர் வேட்பாளர் நாங்கள்தான் என கூறிவருவதால் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறி வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்று பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com