ராஜஸ்தான் தேர்தலில் 21 -வது முறையாக களத்தில் குதிக்கும் 78 வயது முதியவர்!
ராஜஸ்தானைச் சேர்ந்த 78 வயது முதியவர் தீதார் சிங் 1970 களிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார். ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழக்கும் அவர், இந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க தயாராகி வருகிறார்.
இத்தனைக்கும் இவர் மகாத்மாகாந்தி நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்துவரும் சாதாரண தொழிலாளிதான்.
ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தீதார் சிங் போட்டியிடுகிறார். தேர்தலில் இதுவரை 20 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தும் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஏன் நான் போட்டியிடக்கூடாது என்று எதிர்கேள்வி போடுகிறார்.
பிரபலமாக வேண்டும் என்றோ சாதனை புரிய வேண்டும் என்பதற்காகவோ நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உரிமைக்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்கிறார் அவர். நமது உரிமைகளை பெறுவதற்கான ஆயுதம்தான் தேர்தல். இதற்கு வயது ஒரு தடையல்ல என்றும் அவர் கூறுகிறார்.
பஞ்சாயத்து தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என எதையும் அவர் விட்டுவைப்பதில்லை. ஆனால், ஒருமுறைகூட இவர் வெற்றிபெற்றதில்லை.
20 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்று கூறும் தீதர்சிங், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
ஏழைகளுக்கு இலவசமாக நிலம் தருவதாக கூறும் அரசு எங்களைப் போன்ற ஏழைகளை கண்டுகொள்வதே இல்லை. அதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது மகன்களும் கூலித் தொழிலாளியாகவே பணி செய்து வருகின்றனர். எனக்கு நிலம் கிடைக்கும்வரை ஓயமாட்டேன் என்கிறார் தீதர் சிங்.
எனக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது பேரக்குழந்தைகளுக்குகூட திருமணமாகிவிட்டது என்று கூறும் தீதர் சிங், தம்மிடம் ரூ.2500 ரொக்கம் மட்டும் இருப்பதாகவும் நிலமோ வேறு சொத்துக்களோ கிடையாது என்கிறார்.
2008 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 938 வாக்குகளும் 2013 தேர்தலில் 427 வாக்குகளும் 2018 இல் 653 வாக்குகளும் பெற்றுள்ள தீதர் சிங், ஒருமுறைகூட டெபாசிட்டை திரும்ப பெற்றதில்லை.