பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை!

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை!
Published on

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்த ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ்தாஸ் என கூறப்படுகிறது.

தமிழக காவல் துறையில் கடந்த 2021ம் ஆண்டு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜேஷ்தாஸ் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விசாரணையில் ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்.பி.கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களிடம் ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் புஷ்பராணி தெரிவித்திருந்தார், அதன் அடிப்படையில், குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி , முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர். தீர்ப்பை வாசித்த நீதிபதி புஷ்பராணி, பெண் எஸ்.பி-க்கு ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்றும், மேலும் 20,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூபாய் 500 விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com