தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு ரஜினிகாந்த் அளித்த அன்பு பரிசு..!

rajinikanth
rajinikanthsource:twitter
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பத்மா, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் பணியின்போது தற்செயலாகக் கிடைத்த 45 சவரன் தங்க நகைகளை, சிறிதும் தயக்கமின்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதன் உரிமையாளரிடம் சேர்த்தார். வறிய நிலையிலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத அவரது நேர்மை, சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு அவருக்கு "நேர்மையின் அடையாளம்" என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பத்மாவை நேரில் அழைத்து, ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து லலிதா ஜூவல்லரி உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் அவருக்குப் பரிசுகளை வழங்கின. மிக முக்கியமாக, இந்திய அஞ்சல் துறையின் சென்னை மத்திய கோட்டம் சார்பில் பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய சிறப்புத் தபால் தலை (My Stamp) வெளியிடப்பட்டது. மேலும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சார்பில் அவரது பெயரில் பிரீமியம் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பத்மாவைத் தனது இல்லத்திற்கு வரவழைத்து, பொன்னாடை போர்த்தி, தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டினார். அவருடன் அன்போடு ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த தனது ரசிகரும், பரோட்டா கடைக்காரருமான சேகர் என்பவரை ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு அழைத்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. விலைவாசி உயர்வு காலத்திலும் ஏழை மக்களுக்காக வெறும் ஐந்து ரூபாய்க்குப் பரோட்டா வழங்கி வந்த சேகரின் சேவையை அறிந்து, ரஜினிகாந்த் அவருக்குத் தங்கச் சங்கிலி அணிவித்துச் சிறப்பித்தார்.

சமூகத்தில் நிகழும் நற்செயல்களைக் கண்டறிந்து பாராட்டுவது ஒரு சிறந்த கலைஞரின் பண்பு. அந்த வகையில், நேர்மையின் உருவமான பத்மாவை அழைத்து ரஜினிகாந்த் கௌரவித்திருப்பது மிகவும் தகுதியானது என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com