சீட்டாட்டத்துக்கு எதிராக ராஜ்கிரண் கொந்தளிப்பு!

online rummy
online rummy

ஆன்லைன் ரம்மி பற்றி நடிகரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

“சீட்டாட்டம் என்பது மிக மிக மோசமான சூது , சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப் பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது, அதற்கு அடிமையானவர்கள் சீட்டாடத் தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கும் தயங்கமாட்டார்கள். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான், ‘ எல்லாமே என் ராசா தான்’ என்று ஒரு படமே எடுத்தேன்.

அந்தக் கால கட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. ‘ காவல் துறை கைது செய்தால் கேவலமாகி விடுமே’ என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, ‘ஆன்லைன் ரம்மி’ என்ற பெயரில், காவல் துறையைப் பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகி விட்டது. இந்தச் சமூக சீர்கேட்டிற்குப் பிரபலங்கள் பல்ரும், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதுவரை தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக் கிடக்கின்றன. தமிழக அரசு இந்த நாசகார உயிரோடு விளையாடும் விளையாட்டைத் தடுக்கச் சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக் கட்டைகள் போடப்படுகின்றன.

தன்னிச்சையாக இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டைத் தடைசெய்து, பொதுமக்களைக் காக்க வேண்டியது அரசு. ‘இது திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது, இல்லையெனில், இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட, மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள்’ என்று கூறுவதாகச் செய்திகள் வருகின்றன. இது எதில் போய் முடியுமென்று தெரியவில்லை”.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com