

கோவாவில் கப்பல் கட்டும் தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய கடலோர காவல் படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திரா பிரதாப் என்ற கப்பலை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார். இது போன்ற கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்திய கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மாசுவை அகற்றுவதற்காக பிரத்யேகமாக இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
6,000 கடல் மைல் தூரம் வரை செல்லக்கூடிய இக்கப்பலில் ஆயில் பிங்கர் பிரின்டிங் இயந்திரம், ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் மாசை அகற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் கட்டமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இக்கப்பல் 114.5 மீட்டர் நீளமும், 4,200 டன் எடையும் கொண்டது.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவு நோக்கிய பயணத்தில் இக்கப்பல் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கடலோரப் பகுதிகளில் ஏற்படும் எண்ணெய் கசிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுத்து நிறுத்துவதில் இக்கப்பல் பெரும் பங்காற்றும். மேலும், கடல்சார் அவசர நிலைகள் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இந்தியக் கடலோரக் காவல் படையின் ஒட்டுமொத்தத் திறனை இது கணிசமாக உயர்த்தும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று, கோவா கப்பல் கட்டும் தளத்தில் சுமார் 583 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மாசு கட்டுப்பாட்டுக் கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்த 'சமுத்ரா பிரதாப்' கப்பல் இன்று சேவையில் இணைகிறது. இக்கப்பல் இந்தியக் கடல் எல்லையின் பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கும் புதிய வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.