அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தில், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ஸ்ரீ ராமர் சிலையை வடிவமைத்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல ஸ்தபதி யோகிராஜ் அருண். அவர் வடிவமைத்த சிலையைத்தான் ஆலயத்தில் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி டிரஸ்ட் தேர்வு செய்துள்ளாதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மொத்தம் மூன்று ராமர் சிலைகள் தயார் செய்யப்பட்டன. ஆனால், கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலைதான் கருவறையில் வைக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளது. எனினும் மற்ற இருவர் வடிவமைத்த சிலைகள் புறக்கணிக்கப்படாது. அவை ஆலயத்தின் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட உள்ளன.
பிராணப்பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக 3 குழந்தை ராமர் சிலைக்கள் வடிவமைக்கப்பட்டன. இதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டுவரும் ஸ்ரீராம ஜென்மபூமி ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களித்தன் அடிப்படையில் ஸ்தபதி யோகிராஜ் அருண் வடிவமைத்த சிலை தேர்வு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய கும்பாபிஷேகம் அல்லது பிரதிஷ்டை தினவிழா வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. பகல் 12.30 மணி அளவில் நல்ல முகூர்த்த நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தி மிகப்பெரிய ஆன்மிக, கலாச்சார வரலாற்று பின்னணி கொண்டது. இந்நிகழ்வில் பங்கேற்க வருமாறு நாடு முழுவதும் 4,000-த்துக்கும் மேலான துறவிகள், சன்னியாசிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் குழந்தை ராமர் சில பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வுகள் ஜனவரி 16 ஆம் தேதி முதலே தொடங்கிவிடும். வேதகோஷங்கள் முழங்க, மத சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. வாரணசியைச் சேர்ந்த லட்சுமி காந்த் தீட்சித் என்பவர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலய திறப்பு விழாவை காணவரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு உணவு வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களின் போக்குவரத்துக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.