ராமர் ஆலய திறப்பு விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!

அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம்
அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயம்

யோத்தி ஸ்ரீராமர் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜீதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி பகல் 12.30 மணி அளவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 16 ஆம் தேதி முதலே, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முக்கிய சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஒருநாள் விடுமுறை அளிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூடுக்கு இந்திய பார் கவுன்சில் வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது.

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நாட்டின் வரலாறு, மத, கலாசார உணர்வுகளின் அடிப்படையில் மக்களின் நீண்டநாள் கனவு இப்போது நனவாகியுள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு 22 ஆம் தேதி ஒருநாள் விடுமுறை அளிக்கவேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியை வாராணசியைச் சேர்ந்த பூஜாரி லட்சுமி காந்த் தீட்சித் நடத்திவைக்க இருப்பதாக ராமஜென்ம பூமி ஆலய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தேசிய அலைவரிசையில் ஒளிபரப்பாகும். இதற்காக ராமர் ஆலய வளாகத்தில் சுமார் 40 இடங்களில் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர சரயு நதி, ஜடாய சிலை ஆகிய பகுதிகளிலும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதர சில தொலைக்காட்சிகளும் இதை நேரடியாக ஒளிப்பர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com