ஒன்று கூடிய ராமதாஸ் குடும்பம்: கட்டிபிடித்து கண்ணீர் விட்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி!

சில வருடங்களாக மருத்துவர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் இருந்த மோதல் தற்போது முடிந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக பாமக மீண்டும் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
Ramadoss family reuinon
Ramadoss and anbumanix
Updated on

தமிழகம் எதிர்பாராத ஒரு சம்பவம் இன்று மதியம் திடீரென நடந்தேறியது. தமிழக அரசியல் களத்தில் சில ஆண்டுகளாக புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்ப சச்சரவுகள் முடிந்து, இன்று மீண்டும் ஒன்றிணைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது. அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது.

சட்டமன்ற தேர்தல் காலங்களில் அன்புமணியையும், சௌமியா அன்புமணியையும் மருத்துவர் ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். ராமதாஸ் பாமகவின் தலைவர் பொறுப்பிற்கு அவரது மகளைக் கொண்டு வந்தார். இதன் பின்னர் நடைபெற்ற போட்டி அரசியலில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான குடும்ப சண்டை வெளியில் வந்தது.

பாமகவின் மேடைகளில் அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், அந்த அணியின் மற்ற நிர்வாகிகள் யாரும் அன்புமணியை விமர்சித்தது இல்லை. அதேபோல அன்புமணி தலைமையிலான பாமகவினர், மருத்துவர் ராமதாசை விமர்சிக்காமல் இருந்தனர். அன்புமணி தங்கள் குடும்ப பிரிவிற்கு காரணம் பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணி தான் என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். அன்புமணியின் மகள்களும் தங்கள் தாத்தாவை சந்திக்க வீட்டிற்குள் தங்களை அனுமதிக்க வில்லை என்று கண்ணீர் மல்க பேசி இருந்தனர்.

சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையிலான பாமகவின் பிரிவு மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. அதே நேரம் அன்புமணியின் பாமக 5 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. இந்நிலையில் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோரின் 61ஆவது திருமண நாளை முன்னிட்டு, தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெறுவதற்கு அன்புமணி ராமதாஸ் தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு வருகை தந்தார்.

Ramadoss family reunion
Ramadoss and grand daughtersx

அன்புமணி குடும்பத்தினரின் வருகையை எதிர்பார்த்து ராமதாஸ் வீட்டில் இருப்பவர்கள் வரவேற்பு கொடுக்க காத்திருந்தனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்புமணியை கண்ட பின்னர் ராமதாஸ் அவரை கண்கலங்கி கட்டித்தழுவி வரவேற்றார். அன்புமணியும் மிகவும் உணர்ச்சிகரமாக கண்கள் கலங்கி காணப்பட்டார். இரண்டு வருடமாக பிரிந்து இருந்த அவர்களின் குடும்பம் தற்போது மகிழ்ச்சியாக ஒன்றிணைந்துவிட்டது.

அன்புமணியும் சௌமியா அன்புமணியும் இணைந்து ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியிடம் ஆசி பெற்றனர். அன்புமணியின் மகள்களும் பேரக் குழந்தைகளும் தங்களது தாத்தா பாட்டிகளில் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். அன்புமணியின் பேரக் குழந்தைகளை ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கட்டி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சி ராமதாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியுற வைத்தது. பாமக தொண்டர்களில் சில ஆண்டுகால வருத்தம் தற்போது முடிவுக்கு வருகிறது. தங்கள் குடும்ப சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி" இன்று எங்கள் அப்பா அம்மாவின் திருமண நாள் என்பதால் ஆசி பெறுவதற்காக குடும்பத்துடன் வந்திருந்தோம். ஆசியும் பெற்றோம் இது ஒரு மகிழ்ச்சியான தருணம் , இனி நல்லது நடக்கும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com